ஆழ்துளை கிணறு புதிய விதிமுறை வகுக்க ஐகோர்ட் உத்தரவு அரசுக்கு ஒரு வாரம் கெடு
சென்னை: ஆழ்துளை கிணறு விவகாரத்தில் ஒரு வாரத்தில் புதிய விதிமுறை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கெடு விதித்து உத்தரவிட்டது. வில்லிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பது:தமிழகம் முழுவதும் ஆழ்துளை கிணற்றில் பல குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆழ்துளை கிணறு மூலம் பல குழந்தைகள் இறந்ததில் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதில் புதிய நடைமுறை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி அக்னி கோத்ரே, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் இன்று விசாரித்தனர். ஆழ்துளை கிணறு விவகாரத்தில் ஒரு வாரத்தில் புதிய விதிமுறை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு கெடு விதித்து உத்தரவிட்டனர்.