களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் அஞ்சலி பரபரப்பு பேட்டி
சென்னை: டைரக்டர் களஞ்சியம் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் நடிகை அஞ்சலி.‘அங்காடி தெரு அஞ்சலிக்கும், ‘ஊர் சுற்றி புராணம் படம் இயக்கும் களஞ்சியத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் அஞ்சலி. இது பற்றி தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் களஞ்சியம் புகார் அளித்தார். இந்நிலையில் சுராஜ் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்புக்கொண்டார். அதன் ஷூட்டிங் சென்னையில் இன்று நடக்கிறது. இதில் அஞ்சலி பங்கேற்பதால் அவரிடம் பேட்டி காண மீடியாவினர் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர்.நிருபர்களிடம் அஞ்சலி கூறியதாவது: ‘பிரச்னைகள் முடிந்துவிட்டதா? என்று கேட்கிறீர்கள். சில பிரச்னைகள் முடிந்திருக்கிறது. சில பிரச்னை கோர்ட்டில் இருக்கிறது. களஞ்சியம் படத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு எந்த சங்கத்திலிருந்தும் நோட்டீஸ் வரவில்லை. அவர் படத்தில் நடிப்பதா இல்லையா என்பது தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. கோர்ட் உத்தரவுபடித்தான் நடந்துகொள்வேன். இப்போதைக்கு களஞ்சியம் படத்தில் நடிக்கவில்லை. இதில் உறுதியாக இருக்கிறேன். தமிழில் தொடர்ந்து நல்ல கதைகளில் நடிப்பேன் என்றார்.
இதற்கிடையில் இயக்குனர் களஞ்சியத்தின் தாயார் ஆதியம்மாள் (71) நேற்று ஒரத்தநாடு அருகில் உள்ள தெற்குகோட்டை என்ற ஊரில் காலமானார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க களஞ்சியம் சென்றார். இறுதி சடங்கு முடித்தபிறகு அவரிடம் அஞ்சலி விவகாரம்பற்றி கேட்டபோது, ‘இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமனிடம் நான் பேசினேன். சங்கம் என் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சங்கத்தின் நிலைப்பாட்டை மீறி இயக்குனர் சுராஜ் தனது படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்கிறார். இதுபற்றி சங்கம் அவரிடம் விளக்கம் கேட்க உள்ளது. அஞ்சலியை வேறு படத்தில் நடிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. என் படத்தில் நடித்துமுடித்துவிட்டு பிறகு வேறு படத்தில் நடிக்கட்டும் என்றுதான் சொல்கிறேன். ஊரிலிருந்து நான் சென்னை வந்தபிறகு சங்க நிர்வாகிகள் அஞ்சலியிடம் பேச உள்ளனர். அவர் நடிக்க மறுத்தால் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள். என் பட ஷூட்டிங்கை நடத்தாமல் ஒன்றரை வருடமாக சங்கத்தை நம்பித்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.