பொள்ளாச்சி:கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள ஏஎஸ்டி புரத்தில் வசிப்பவர் குணசீலன் (66). இவரது வீட்டில் யானை தந்தங்கள், சிறுத்தை மற்றும் புலித்தோல்கள் மற்றும் வன உயிரின பொருட்கள் உள்ளிட்டவை, பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று குணசீலன் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு தனி அறையில் அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்த போது, அதில், யானை தந்தம் 5, சிறுத்தை உருவ தோல் 1, தலை உருவ தோல் 1, புலித்தோல் 1, புலி பல் 2, ஆண் யானை பல் 1, கடமான் கொம்பு 7 மற்றும் யானை தந்தத்தால் ஆன அழகு பொருட்கள் உள்ளிட்டவை இருந்தது.
குணசீலனிடம் வனத்துறையினர் விசாரித்த போது, யானை தந்தம், புலித்தோல் உள்ளிட்டவை முன்னோர்கள் வைத்திருந்தவை என்று கூறினார். இதை அடுத்து யானை தந்தங்கள், புலி மற்றும் சிறுத்தை தோல்கள் உள்ளிட்ட அனைத்தையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து, ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வனத்துறையினர் கூறுகையில், பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள குணசீலன் என்பவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களுக்கு உரிய ஆவணம் இருப்பதாக, அதை வைத்திருந்த குணசீலன் கூறி உள்ளார். இருப்பினும், இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். ஆவணம் மற்றும் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.