டெல்லியில் விரைவில் பேட்டரி ரிக்ஷாக்கள் இயக்க அரசு திட்டம்
புதுடெல்லி:டெல்லியில் பேட்டரியால் இயங்கும் 3 சக்கர ரிக்ஷாக்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.டெல்லியில் பேட்டரியால் இயங்கும் ரிக்ஷாக்களை இயக்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இந்த ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா போன்று மூன்று சக்கரங்களை கொண்டதாக இருக்கும். பேட்டரியில் இயங்குவதால், பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும். இது குறித்து, போக்குவரத்து கமிஷனர் ஜியானேஷ் பார்தி கூறுகையில், ‘இது போன்ற பேட்டரியால் இயங்கும் ரிக்ஷாக்களை தயாரிக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவற்றின் வாகனங்களை சோதனை செய்து அவற்றின் தரத்திற்கேற்ப அனுமதி வழங்குவது குறித்து டெல்லி அரசு பரிசீலித்து வருகிறது. பேட்டரியால் இயங்கும் இவ்வகை ரிக்ஷாக்கள் மற்ற ஆட்டோ ரிக்ஷாக்களுடன் ஒப்பிடும் போது விலை மலிவாகும். சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவையாகும்’ என்றார்.வழக்கமான ஓட்டுனர் உரிமம் பெற்ற டிரைவர்களை கொண்டு பொது மக்கள் சேவைக்காக போக்குவரத்து துறையின் அனுமதியுடன் மட்டுமே இவை இயக்கப்படும். பேட்டரி ரிக்ஷா தயாரிப்பு நிறுவன அதிகாரி கூறுகையில், ‘1000 வாட் பேட்டரியால் இயங்கும் இந்த இ&ரிக்ஷாக்கள் மற்ற கியர் ஆட்டோக்களை போலவே இயங்கும். இதனை தயாரிக்க டெல்லி அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்’ என்றார். இவ்வகை பேட்டரி ரிக்ஷாக்களின் விலை மலிவாக இருப்பதால் இவற்றை வாங்க பலருக்கும் ஆர்வம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.