வாடிப்பட்டி அருகே பள்ளி பஸ் கவிழ்ந்து 52 குழந்தைகள் காயம்
வாடிப்பட்டி:மதுரையில் இயங்கும் பிரபல தனியார் பள்ளியின் பஸ் ஒன்று இன்று காலை வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதி மாணவ, மாணவியர்களை அழைத்து வர புறப்பட்டது. பஸ்சை ராமகிருஷ்ணன் (55) என்பவர் ஓட்டினார். திருவாலவாயநல்லூர், அய்யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டு, சி.புதூர் கிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே வந்த அரசு பஸ்சுக்கு வழி விடுவதற்காக பஸ்சை டிரைவர், ஓரமாக ஓட்டிச் சென்றார். சாலை விரிவாக்கத்துக்காக கொட்டப்பட்டிருந்த மண் மீது பஸ் ஏறியது. இதில் பஸ்சின் இடதுபுற சக்கரங்கள் மண்ணில் அமுங்கியதால், பஸ் அப்படியே பக்கவாட்டில் சாய்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அலறினர். அவர்களது சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த மாணவர்களை மீட்டு, அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் 52 மாணவ, மாணவியர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‘கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை இல்லை’