சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கும்மிடிப்பூண்டி அருகே புதிய நீர்தேக்கம் அமைப்பதற்கான பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் இறுதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் மற்றும் வீராணம் ஏரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் கிருஷ்ணா நீர் 12 டிம்எசி பெறப்பட்டு வருகிறது. இந்த நீரை சேமித்து வைக்க போதிய வசதி இல்லாததால் ஆண்டுதோறும் 9 டிஎம்சி மட்டுமே கிருஷ்ணா நீர் பெற முடிகிறது. இதனால், கிருஷ்ணா நீரை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் மூலம் 1 டிஎம்சி அடி கிருஷ்ணா நீரை சேமித்து வைக்க முடியும். கடந்த செப்டம்பர் மாதம் புதிய நீர்தேக்கத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக ஏரிகளை இணைப்பதற்கான பணிகளும், இந்த ஏரிக்கு கிருஷ்ணா நீர் பெறுவதற்காக தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து 8.3 கிலோ மீட்டர் வரை கால்வாய் தோண்டும் பணியும் நடந்து வருகிறது. இந்த புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டு மே மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிக்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறும் போது, பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரையும், கிருஷ்ணா தண்ணீரையும் சேமித்து வைக்கவும் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணா நீரை பெறுவதற்காக தாமரைக்குப்பம் அருகில் இருந்து கால்வாய் தோண்டப்பட்டு நீர்தேக்கத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணா நீரை முழுமையாக பயன்படுத்த முடியும். இந்த திட்டத்திற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது என்றார்.