தோழி திருமணத்தில் பரபரப்பு மாணவியை தாக்கிய மாணவன் கைது
ஆவடி:தோழி திருமணத்துக்கு வந்திருந்த மாணவியை தாக்கிய மாணவர் கைதானார்.ஆவடியை அடுத்த பட்டாபிராம் டாக்டர் அம்பேத்கர் நகர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன் மகள் ரெபேகா (17). பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரியில் ரெபேகா, பிசிஏ 2ம் ஆண்டு படிக்கிறார். ஆவடி அடுத்த மேலப்பேடு மாமல்லர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (18), வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக தெரிகிறது.
கடந்த 28ம் தேதி பட்டாபிராம் சிடிஎச் சாலையில் நடைபெற்ற தோழியின் திருமணத்துக்கு ரெபேகா, வெங்கடேசன் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு திடீரென இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் வெங்கடேசன், ரெபேகாவை அடித்து உதைத்துவிட்டார்.ரெபேகா கொடுத்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்.