அலகாபாத்:பிரதமர் நரேந்திரமோடி வாரணாசி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மோடியிடம் தோல்வியை தழுவிய காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ தலைவர்களில் ஒருவரான நரேந்திரமோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 3.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் அமோக வெற்றி பெற்று பிரதமரானார். இதன்பின்னர் வதோதரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். வாரணாசி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பாக அஜய் ராயும் போட்டியிட்டனர். அஜய் ராய் வாரணாசி தொகுதியில் உள்ள பிந்தரா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இருப்பினும் மக்களவை தேர்தலில் அவர் டெபாசிட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் மோடி வெற்றியை எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர் அதிகபட்சம் ரூ. 70 லட்சம் செலவழிக்கலாம். ஆனால் மோடி சார்பாக கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டதாக அஜய் ராய் குற்றம் சாட்டியுள்ளார். மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். அவரது வருமானம் குறித்து தகவல் எதுவும் அளிக்கவில்லை. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரானது. மேலும் வாரணாசியில் மோடியின் உருவம் பதித்த டிஷர்ட்கள், தொப்பிகள் வினியோகிக்கப்பட்டன. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பானதாகும். எனவே வாரணாசி தொகுதியில் மோடியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அஜய்ராய் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அலகாபாத் ஐகோர்ட் பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.