இன்று ஓய்வு பெறவிருந்த கோவை சிறைத் துறை டிஐஜி கோவிந்தராஜன் 2 நாள் முன்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2011ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பினர். 2012ம் ஆண்டில் அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு பின், தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்காகவே கடைசி நாளில் நடவடிக்கை எடுக்காமல், 2 நாள் முன்பாக அவரை அரசு சஸ்பெண்ட் செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுவே சர்ச்சைக்குரியதுதான். முறைகேடுகள் உறுதியான நிலையில், சிபிசிஐடி அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், அப்போதே நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். காலதாமதமாக நடவடிக்கை எடுப்பது மேலும் தவறுகள் நடைபெற ஏதுவாகவே அமையும்.
சிபிசிஐடி போலீசாரின் அறிக்கையில் முக்கியமான குற்றச்சாட்டு, குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு பல்வேறு சலுகைகள் காட்டப்பட்டதாக கூறப்படுவதுதான். முன்பொரு காலத்தில் ‘களி சாப்பிடப் போகிறாய்‘ என்று சிறைக்கு போவதை சொல்லி மிரட்டுவார்கள். ஆனால், இப்போது சிறைக்கு வெளியே பெரும் செல்வந்தர்கள்தான் நோய்களுக்கு பயந்து கூழ், களி என்று தேடிச் செல்கிறார்கள். சிறைகளில் கைதிகளுக்கு அரசே வாரந்தோறும் பிரியாணி உள்பட நல்ல உணவு அளிக்கிறது. இதையும் தவிர சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் மற்றும் பெரிய தாதாக்களுக்கு ரகசியமாக தனி சமையல் கூடம் அமைத்து அறுசுவை உணவு படைக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அதே போல், சென்னை புழல், கோவை, மதுரை, வேலூர், பாளையங்கோட்டை சிறைகளில் உயர் அதிகாரிகள் எத்தனை முறை சோதனை நடத்தினாலும், நவீன மொபைல் போன்கள், வெளிநாட்டு மது வகைகள், சிகரெட்டுகள் போன்றவை சிக்குகின்றன.
தொடர்ந்து, சிறை கைதிகளுக்கு அவை சப்ளையாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறையில் உயர் அதிகாரிகளே எல்லா சட்டவிரோத செயல்களுக்கும் உடந்தையாக இருப்பதுதான். இதை தடுப்பதற்கு சிறை அதிகாரிகளையும் அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சிறிய முறைகேடுகள் நடக்கும் போதே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறுகள் எந்தெந்த வகைகளில் நடைபெறுகிறது என்பதை ஆராய்ந்து அவற்றை தடுப்பதற்கு புதிய நடைமுறைகளை கொண்டு வர வேண்டும். சிறைக்கு செல்ல குற்றவாளிகள் அஞ்சும் அளவுக்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப சிறை விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும், தவறு செய்யும் அதிகாரிகள் மீது உடனுக்குடன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அதிகாரிகளுக்கும் பயம் ஏற்படும்.