சென்னை: ஓய்வு பெற்ற வங்கி பெண் அதிகாரியை கொன்ற வழக்கில், அவரது கணவரின் சகோதரி மகனை போலீசார் கைது செய்தனர்.ராயப்பேட்டை, ஜான் ஜானிகான் சாலை தேவராஜன் தெருவை சேர்ந்தவர் அலி முகமது உசேன் (59). இவரது மனைவி மெகருன்னிசா (57). சென்னை கோட்டையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 25ம் தேதி அவரது வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 60 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மெகருன்னிசா வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் இருவர் வந்து செல்வது பதிவாகியிருந்தது. அதில் ஒருவர் பர்தா அணிந்து பெண் வேடமிட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கேமராவில் பதிவான நபர்களின் அடையாளத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த கொலையை மெகருன்னிசாவுக்கு நன்கு அறிமுகமானவர்களே செய்திருக்க வேண்டும் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கேமராவில் பதிவான பர்தா வாலிபரின் தோற்றம் மற்றும் அடையாளம் ஆகியவை மெகருன்னிசாவின் உறவினர் ஒருவரது தோற்றத்துடன் ஒத்துப்போனது. இதையடுத்து அந்த நபரை பிடித்தனர். அவர் மெகருன்னிசாவின் கணவரான அலி முகமது உசேனின் சகோதரி மகன் சபீர் (35). போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அத்தை மெகருன்னிசாவை கொன்றதை சபீர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். \இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சபீர் வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். பலரிடம் கடனும் வாங்கியிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் அதை திருப்பி கேட்டதால் நெருக்கடியில் சிக்கி தவித்தார். அத்தை மெகருன்னிசாவிடம் சென்று ரூ.3 லட்சம் பணம் கேட்டிருக்கிறார். அவர் ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார். மீண்டும் சென்று பணம் கேட¢டபோது இல்லை என மெகருன்னிசா மறுத்துவிட்டார். இதையடுத்து பணத்தை கொள்ளையடிக்க தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சபீர் பர்தா அணிந்து அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மெகருன்னிசா வீட்டின் கீழ் தளத்தில் அச்சகத்தில் இருப்பவர்கள் தடுத்தபோது, நண்பரும் சபீரும் கணவன், மனைவி போல் நடித்து அவர்களை ஏமாற்றியுள்ளனர். வீட்டுக்குள் சென்றதும் மெகருன்னிசாவின் கை, கால்களை கயிற்றால் கட்டிவிட்டு வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டனர். மெகருன்னிசா விஷயத்தை சொல்லிவிடுவார் என்பதால் அவரை கழுத்து நெரித்து கொன்றுள்ளனர். சபீர் கொடுத்த வாக்குமூலத்தில் இந்த தகவல் தெரியவந்தது.இவ்வாறு போலீசார் கூறினர்.தப்பிய சபீரின் நண்பரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.