சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பணியில் கவனக்குறைவாக உள்ள இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் இடமாற்றம் செய்யவும் கமிஷனர் ஜார்ஜ் முடிவு செய்துள்ளார்.சென்னையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை என குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த கமிஷனர் ஜார்ஜ் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பணி செய்யாத மற்றும் புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று ஜார்ஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல இன்ஸ்பெக்டர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. புகார் அளித்தால் நடவடிக்கை இல்லை, எதிர் தரப்பினரிடம் ஆதாயம் பெற்று புகார் அளித்தவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கின்றனர், பாதுகாப்பு பணியை சரியாக மேற்கொள்வது இல்லை, ரோந்து பணிகளில் தீவிரம் காட்டுவதில்லை, கொள்ளை வழக்குகளில் புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்க வைப்பது, ஏளனமாக பேசுவது, குற்ற சம்பவங்கள் நடக்கும் இடத்துக்கு தாமதமாக செல்வது என்று பல இன்ஸ்பெக்டர்கள் மீது சரமாரியான புகார்கள் எழுந்துள்ளது.
இதற்கிடையில், எழும்பூர் மற்றும் ஜாம்பஜாரில் இரண்டு மூதாட்டிகள் பணம், நகைக்காக பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமராவில் குற்றவாளிகள் உருவம் தெரிந்தும் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை. இது சென்னை போலீசாருக்கு அவப் பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இதைத் தொடர்ந்து கொலை நடந்த வழக்கில் துப்பு துலக்க முடியாத ஜாம்பஜார் இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் எழும்பூர் இன்ஸ்பெக்டர் மதியழகு இருவரையும் நேற்று அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு ஜார்ஜ் மாற்றினார். மேலும், பல அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, காவல் நிலையங்களில் சரியாக பணி செய்யாத இன்ஸ்பெக்டர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளனர். அதிக புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால், சென்னை காவல் நிலையங்களில் பணி செய்து வரும் இன்ஸ்பெக்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.