மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்பு தானம்
பூந்தமல்லி: போரூர் ஆர்.இ.நகர் 7வது தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (44). எலக்ட்ரீஷியன். மனைவி நூர்ஜகான் (39). இவர்களது மகன் அப்துல் ரகுமான் (12), அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பும், மகள் ரகமத் பேகம் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 22ம் தேதி மாலை சைக்கிள் ஓட்டி விளையாடிய அப்துல் ரகுமான், எதிர்பாராத விதமாக கீழே விழுந்தான். இதில் தலையில் அடிபட்டது. உடனே அவனை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று மாலை அப்துல் ரகுமான் மூளைச்சாவு அடைந்தான். இந்த தகவலை பெற்றோரிடம் டாக்டர் கூறியபோது அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து, அப்துல் ரகுமானின் உடலுறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அப்துல் ரகுமானின் இதயம், சிறுநீரகம் தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.