கோவை: நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க, தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய் தார். அதன்படி ‘உங்களுடன் நான்‘ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்.முதல்கட்டமாக இன்று கோவை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். இதற்காக நேற்று விஜயகாந்த் கோவை வந்தார். அவருடன் வழக்கமாக வரும் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் வரவில்லை.இன்று காலை சூலூர் அடுத்த ராவத்தூரில் உள்ள தனது தோட்டத்தில் நிர்வாகிகளை விஜயகாந்த் சந்தித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் தினகரன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், மாநகர் மாவட்ட செயலா ளர் தமிழ்முருகன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் காலை 8 மணிக்கே ராவத்தூர் தோட்டத்துக்கு வந்தனர்.அடையாள அட்டையை சரிபார்த்தபின், முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை காவலர்கள் உள்ளே செல்லவிடாமல் கேட்டை இழுத்து பூட்டினர். ஆலோசனை கூட்டம் முடிந்ததும், விஜயகாந்தை அனைவரும் சந்திக்கலாம் என சமாதானப்படுத்தினர்.ஆனால் 11.30 மணி வரை உள்ளே விடுவதற்கான அறிகுறி தெரியவில்லை. சாமியானா பந்தல் எதுவும் போடாததால் வெயிலில் காய்ந்த தொண்டர்கள் ஆவேசம் அடைந்தனர். காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்ளே புக முயன்றவர்களை காவலர்கள் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.திடீரென காவலர்களை தள்ளிவிட்டு, கேட்டை திறந்து கொண்டு திபுதிபுவென உள்ளே புகுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்த், அங்கு வந்து விசாரித்தார். பின்னர் தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.