ஷாகிரி ஹாட்ரிக் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து
மனாஸ் நகரில் நேற்றிரவு நடந்த உலக கோப்பை போட்டியில் குரூப் இ பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து-ஹோண்டுராஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 3 கோல்களையுமே சுவிஸ் வீரர் சேர்டான் ஷாகிரி அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் சுவிஸ் அணிக்கான முதல் கோலை ஷாகிரி அடித்தார். பெனாலிடி எல்லையில் குவிந்திருந்த ஹோண்டுராஸ் தடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றி பந்தை கடத்திச் சென்று கோலை நோக்கி பந்தை உதைத்தார் ஷாகிரி. சுழன்று சென்ற பந்து கிராஸ் பாருக்கு சற்று கீழே இறங்கி கோலுக்குள் நுழைந்தது. அடுத்த கோலை 31வது நிமிடத்தில் அடித்தார் ஷாகிரி. ஜோசிப் டிர்மிக் கொடுத்த பாஸை பெற்ற ஷாகிரி ஹோண்டுராஸ் தடுப்பாட்ட வீரர்களின் தவறை பயன்படுத்தி கோல் அடித்தார். 71வது நிமிடத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்தார் ஷாகிரி. இடது புறம் இருந்து டெர்மிக் அனுப்பிய பந்தை கோலாக்கி ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார் ஷாகிரி. சுவிஸ் வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னர் ஹோண்டுராஸ் வீரர்களின் தடுப்பாட்டம் சற்றும் எடுபடவில்லை. இறுதியில் சுவிட்சர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டு ராஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. வரும் செவ்வாய்க்கிழமை சாவ் போலோ நகரில் நடைபெறும் நாக் அவுட் சுற்று போட்டியில் சுவிட்சர்லாந்து அணி அர்ஜென்டினாவை எதிர்கொள்ள உள்ளது.