தலித் பெண்கள் மீது வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை காங்கிரஸ் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த 17 வயது தலித்பெண் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது வெற்றிலை தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த வேதனையையும், அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் இரண்டு இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு இன்னும் மறையாத சமயத்தில் தமிழகத்தில் இப்படி ஒரு கொடிய சம்பவம் நடந்திருப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. இது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செயலில் ஈடுபடுவோர் மீது பாலியல், கொலை வழக்கு மட்டுமில்லாது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.