கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அருகே புதுமண தம்பதியை உருட்டுக் கட்டையால் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடுகின்றனர். கவரப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (37). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். திருமணமாகி மனைவி இறந்து விட்டார். குடிசை வீட்டில் தனியாக வசித்தார். நேற்று இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். அப்போது லுங்கி அணிந்து, முகத்தை துணியால் மூடி வந்த 3 பேர் குடிசை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு சூட்கேசில் இருந்த 3 பவுன் நகை, ஒரு கொலுசு ஆகியவற்றை திருடினர். பின்னர் அருகில் இருந்த மாடி வீட்டுக்கு சென்றனர். அங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து 17 சவரன் நகை, ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடினர். அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது, திருமணமாகி 6 மாதம் ஆன புதுமண தம்பதியர் டில்லிபாபு (29), அவர் மனைவி ராஜேஸ்வரி (24) ஆகியோர் காற்றுக்காக அங்கு படுத்திருந்தனர். சத்தம் கேட்டு எழுந்த தம்பதி, மர்ம நபர்களை பார்த்து சத்தம் போட்டனர். இதனால் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் தம்பதியை மூவரும் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களிடம் இருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். புகாரின் பேரில் கவரப்பேட்டை எஸ்.ஐ. சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். திருவள்ளூரில் இருந்து கைரேகை நிபுணர் ராஜாராம் வந்து கொள்ளைபோன வீடுகளில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார். கொள்ளையர்களை போலீசார் தேடுகின்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்த வீடுகளில் 26 பவுன் நகை, மற்றும் பணம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.