திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பாதிரியார் மீது பெண் புகார்
சென்னை: தேவாலய பாதிரியார் தன்னிடம் திருமணம் ஆசை காட்டி ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.காசிமேடு சேக்மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜேக்கப் ஆல்பர்ட் (42). இதே தெருவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இங்கு மண்ணடியை சேர்ந்த மேரி என்ற பெண் இவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காசிமேடு காவல்நிலையத்தில் மேரி நேற்று மாலை புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், பாதிரியார் ஜேக்கப் ஆல்பர்ட் தன்னிடம் நெருங்கி பழகியதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு தற்போது ஏமாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். புகாரின்பேரில், பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.