திருவொற்றியூர்: திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மாதவரம் லட்சுமிபுரத்தில் நேற்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்து பேசியதாவது:பாமக இனி போயஸ் தோட்டத்துக்கோ, கோபாலபுரத்துக்கோ செல்லாது. தைலாபுரத்தை நோக்கி மட்டுமே செல்லும். புதிய பாதை, புதிய செயல் திட்டத்துடன் கட்சி செயல்படும். திசைமாறி போனதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இனி இதுபோன்ற நிலை ஏற்படாது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தில்லுமுல்லு செய்துதான் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வாக்கு இயந்திரத்தில் 50க்கு ஒரு ஓட்டு என மாற்ற முடியும். ஓட்டு போடும் மெஷினில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காகத்தான் பழைய ஓட்டு போடும் முறை வேண்டும் என்கிறோம். 3 லட்சம் வரை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் அளவுக்கு ஜெயலலிதா நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? மின்சார பிரச்னையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். பிரதமர் ஆக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றும் முடியவில்லை.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.கூட்டத்தில், புழல் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துதல், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தல்,. திருவள்ளூர் அரசு மருத்துவமனையை சீரமைக்க நிதி ஒதுக்குதல், சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ், மாநில துணைத் தலைவர் கே.என்.சேகர், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், பழனி, வடிவேல், அப்பு, பூபதி, யுவராஜ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.