திருவள்ளூர்: திருவள்ளூரில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்தவர் ஒரு ஆண்டுக்கு பின்னர் கைதானார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மணவாளநகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 16.6.2025 அன்று, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மூர்த்தி, குணா, சேகர், சதீஷ் ஆகியோரை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிவா, மகேஷ், சேகர், கன்னியப்பன், மணி, சக்திவேல், ஏழுமலை மற்றும் வெங்கடேசன் ஆகிய எட்டு பேர் தாக்கினர்.இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆறு பேரை கைது செய்தனர். இதில், ஏழுமலைக்கு பதிலாக சந்துரு என்பவர் மகன் சதீஷ், ஆள்மாறாட்டம் செய்து வழக்கில் கைதாகி, பின் விடுதலையானார்.இதில், ஏழுமலை (36) ஆள்மாறாட்டம் செய்தது மணவாளநகர் போலீ சாருக்கு தெரியவந்தது. இதனால், போலீசார் ஏழுமலையை கடந்த ஒரு ஆண்டாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மணவாளநகர் பகுதியில் ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பஜாரில் நின்று கொண்டிருந்த ஏழுமலையை கைது செய்தார். அவரை நேற்று மாலை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக வெங்கடேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.