பிளஸ் 2 மாணவி தற்கொலை கடிதத்தில் ஆசிரியர் மீது புகார்
திருப்பூர்: பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மனோகர்(42). மனைவி சுசிலா(35). இவர்கள் திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் கடந்த 20 வருடங்களாக ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.மூத்த மகள் சுவாதி(17), வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் கம்பத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க பெற்றோர் சென்றுவிட்டனர். வீட்டில் சுவாதியும், தங்கைகளும் மட்டும் இருந்தனர்.இன்று காலை சுவாதி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். காலை எழுந்ததும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கைகள், அருகில் உள்ள சித்தியிடம் இதுபற்றிதெரிவித்தனர்.உடனடியாக வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வந்து சுவாதியின் சடலத்தை கைப்பற்றினர். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், பள்ளியில் ஆசிரியர்கள் சரியாக பாடம் சொல்லி தருவதில்லை. குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமே பாடம் எடுக்கின்றனர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்வதாக எழுதியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். கடிதத்தின் முழு விவரத்தை தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.