மணல் அள்ளியவர்களை மடக்கியதால் தாசில்தார் சிறைபிடிப்பு காஞ்சியில் பரபரப்பு
காஞ்சிபுரம்: பாலாற்றில் மணல் அள்ளியவர்களை மடக்கிய பெண் தாசில்தாரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோக் (35), சுரேஷ் (30). இருவரும் நேற்றிரவு, காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு வந்தனர். அப்போது அவ்வழியாக ஜீப்பில் வந்த காஞ்சிபுரம் தாசில் தார் பானு, அவர்களை மடக்கினார். உடனே இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு கிராம மக்களிடம் நிலைமையை கூறியுள்ளார்.இதையடுத்து 25க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டு தாசில்தாரை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.உடனே பாலுசெட்டி போலீசுக்கு தாசில்தார் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாசில்தாரை மீட்டனர். பின்னர் அசோக்கை கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேஷை தேடி வருகின்றனர்.