தமிழகத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். சீசன் சமயத்தில் இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்காக வெளிநாட்டு பயணிகளும் வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இங்கு பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், செண்பகாதேவி அருவி, புலி அருவி போன்ற அருவிகள் உள்ளன. மூலிகை கலந்த தண்ணீர் விழும் இந்த அருவிகளில் குளித்தால் நோய் நீங்கும் என்பார்கள். கங்கைக்கு ஒப்பான குற்றால அருவியில் குளித்தால் பாவம் தொலைந்து விடும் என்று திரிகூடராசப்ப கவிராயர் பாடியுள்ளார். பஞ்ச சபைகளில் ஒன்றான சித்ரசபையை கொண்ட குற்றாலநாத சுவாமி கோயிலும் இந்த ஊரில்தான் உள்ளது. திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய குற்றால குறவஞ்சியில் இதன் அருமை பெருமைகளை குறிப்பிட்டிருக்கிறார். சிறப்பு வாய்ந்த இந்த சுற்றுலாதலத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், சுற்றுச்சூழல் கெட்டு போவதுடன், இயற்கை வளங்களும் அழிந்து வருகின்றன.தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை ஐகோர்ட் ஒரு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. அதில் 32 நிபந்தனைகளை பின்பற்ற அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்:
* சோப், ஷாம்பூ, சீயக்காய் போன்றவற்றை அருவி களில் குளிப்பவர்கள் பயன்படுத்துவதால், தண்ணீர் மாசு படுகிறது. இதனால், அரிய வகை மூலிகை தாவரங்கள் அழிந்து வருகின்றன. எனவே, இவற்றை பயன்படுத்தவும், அருவிகளில் துணி துவைக்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. * அருவியில் இருந்து ஓடும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். சுகாதாரமான கழிப்பறைகள் கட்ட வேண்டும். * அருவி பகுதியில் மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும். மதுபானம் குடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். * குப்பைகள் தேங்க விடாமல் அகற்ற வேண்டும். போதிய அளவில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். * வாகனங்கள் நிறுத்துவதற்கு சரியான வசதிகள் செய்வதுடன், முறையான கட்டணங்களை வசூலிக்க வேண்டும். இவை உள்பட அடிப்படை வசதிகளை பெருக்க மேலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் ஒத்துழைப்பின்றி இவற்றை அமல் படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எனவே, கலெக்டர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை அரசு ஏற்படுத்தி, தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீதிமன்ற உத்தரவுக்கான பலன் கிடைக்கும். இயற்கை அளித்த பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.