பியாஸ் நதியில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நஷ்டஈடு ஐகோர்ட் உத்தரவு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பியாஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆந்திராவை சேர்ந்த 24 இன்ஜினியரிங் மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க சிம்லா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 48 பேர் கடந்த 6ம் தேதி இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். கடந்த 8ம் தேதி மணாலி செல்லும் வழியில் பியாஸ் நதிக்கரையோரம் அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த லார்ஜி அணையிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 24 மாணவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் அடித்து செல்லப்பட்டனர். இதில் 5 மாணவர்களின் உடல் மட்டுமே மறுநாள் கரை ஒதுங்கியது. மற்ற மாணவர்களை மீட்க கடற்படைவீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். இதுவரை 16 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை இமாச்சல பிரதேச ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்சூர் அகமது மிர் மற்றும் நீதிபதி தர்லோக் சிங் சவுகான் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பியாஸ் நதியில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் 24 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நஷ்ட ஈட்டை மாணவர்கள் படித்த கல்லூரியும், லார்ஜி அணை நிர்வாகமும் சேர்ந்து கூட்டாக வழங்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.