அமித்ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி திடீர் மாற்றம்
மும்பை: பிரதமர் நரேந்திரமோடியின் வலது கரமாக கருதப்படும் அமித்ஷா மீதான போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வரும் மும்பை சிபிஐ கோர்ட் நீதிபதி திடீரென புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். பிரபல தாதா சொராபுதீனை போலீசார் திட்டமிட்டு போலி என்கவுன்டர் செய்ததில் இவருக்கு பங்கு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் அமித்ஷா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி இந்த வழக்கு தற்போது மும்பை சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சொராபுதீன் வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராமும் போலீசார் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதுவும் போலி என்கவுன்டர் என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கிலும் அமித்ஷா பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் மும்பை சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு வழக்கிலும் நேரில் ஆஜராக கடந்த மே மாதம் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தேர்தல் பணி காரணமாக அமித்ஷாவால் வரமுடியவில்லை என அவரது வக்கீல் விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து கடந்த வாரம் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அமித்ஷா வரவில்லை. டெல்லியில் பிசியாக இருக்கிறார் என அவரது வக்கீல் தெரிவித்தார். இதை சிபிஐ கோர்ட் நீதிபதி ஜே.டி.உத்பட் ஏற்றுக் கொள்ளவில்லை. முறையான காரணம் இல்லாமல் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தார். அடுத்த முறை கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் திடீரென புனே கோர்ட்டுக்கு ஜே.டி.உத்பட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமித்ஷா வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால் சொராபுதீன் மற்றும் துளசிராம் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணையில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சிபிஐ கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.