டோக்கியோ: ஜப்பானில் கொள்ளு தாத்தாவும், 5 வயது பேரனும் வாக்கிங் சென்றபோது, திடீரென கரடி பேரனை தாக்கியது. அப்போது, அவர்களின் செல்ல நாய், கரடியுடன் போராடி பேரனை உயிருடன் மீட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு வடக்கே 340 கி.மீ. தொலைவில் ஓடேட் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் கடந்த சனிக்கிழமை மாலையில் ஆற்றங்கரை ஓரமாக தனது 5வயது கொள்ளுப் பேரனுடன் ஒரு தாத்தா வாக்கிங் சென்றனர். அவர்களுடன் 6 வயதான செல்ல நாய் குட்டி மீகோவும் உடன் சென்றது.அப்போது, ஓரிடத்தில் அந்த சிறுவனை கறுப்புநிற ஆசிய கரடி துரத்தியது. அந்த சிறுவன் போட்டிருந்த அரைக்கால் சட்டையை கடித்து குதறியது. நகங்களால் சிறுவனின் உடலில் பிராண்டியது. பீதியடைந்த கொள்ளு தாத்தா அந்த பகுதியில் செல்வோரிடம் உதவி கோரி சத்தம் போட்டு அலறினார். அப்போது நாய் மீகோ, அந்த கரடியை சுற்றிசுற்றி வந்து கடித்தது. இதில் கரடி நிலைகுலையவே அதை நாய் விரட்டிச் சென்று சண்டை போட்டது. இதையடுத்து, கரடி ஓடி விட்டது. கரடியிடம் சிக்கிய சிறுவனுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். இது பற்றி சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட மீகோ எப்போதும் அமைதியாக பயந்த சுபாவத்துடன் காணப்படும். எனது மகனை கரடி தாக்கியதை பார்த்து ஆவேசத்துடன் கரடியுடன் சண்டை போட்டதை நம்பவே முடியவில்லை. மீகோவால் எனது மகன் உயிர் பிழைத்தது ஆச்சரியமாக இருக்கிறது என்றனர்.