கோயம்பேடு பஸ் நிலையத்தில் 8 கிலோ தங்கக்கட்டி சிக்கியது ஒடிசா வாலிபரிடம் விசாரணை
அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் இன்று நடத்திய பாதுகாப்பு ஒத்திகையின்போது 8.5 கிலோ தங்கம் பிடிபட்டது. இது பற்றி ஒடிசா வாலிபரிடம் விசாரிக்கின்றனர்.இந்தியாவில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்துகின்றனர். இதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் ஹம்லா ஒத்திகை நடந்தது. சென்னையில் உள்ள ரயில், பஸ் நிலையத்தில் போலீசார் ஒத்திகை நடத்தினர். அப்போது பயணிகளின் உடைமைகளை சோதனை நடத்தினர்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் பையில் 8.5 கிலோ தங்கக் கட்டிகள், ரூ.8 லட்சம் இருந்தது. அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த ராகுல் அகர்வால் (33) என்பது தெரிந்தது. இவர் புவனேஸ்வரில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்துள்ளார். அங்கிருந்து பஸ்சில் கோயம்பேடு வந்துள்ளார்.இங்கிருந்து கோவை குப்தா சான்ட்ராம் நகரில் உள்ள ஆதித்யா அடுக்கு மாடி குடியிருப்பு செல்ல விருந்ததாக ராகுல் அகர்வால் தெரிவித்தார். இதையடுத்து ராகுல் அகர்வாலை கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் அவரிடம் விசாரணை நடத்துகிறார்.ஹம்லா ஒத்திகையின்போது 8.5 கிலோ தங்கத்துடன் ஒடிசா வாலிபர் சிக்கியது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை பார்த்து பயணிகள் கூடிவிட்டனர்.