நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா
குய்யாபா நகரில் இன்று அதிகாலை நடந்த உலக கோப்பை போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பான், கொலம்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சி குரூப்பில் முதலிடத்தை பிடிக்கலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய கொலம்பியா துவக்கம் முதலே அதிரடி காட்டியது. தங்களது அணிக்கு கிடைத்த பெனாலிடி வாய்ப்பை பயன்படுத்தி கொலம்பியா அணியின் காட்ராடோ 17வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜப்பான் வீரர் ஒகாசாகி 45வது நிமிடத்தில் கோல் அடிக்கவே முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கியதும் கொலம்பிய அணி விஸ்வரூபம் எடுத்தது. கொலம்பிய வீரர் மார்டினெஸ் 55 மற்றும் 82வது நிமிடங்களில் கோல் அடித்து ஜப்பான் வீரர்களை திணற வைத்தார். 89வது நிமிடத்தில் கொலம்பியாவின் ரோட்ரிக்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்கவே 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கொலம்பியா நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.