பிரேசில் நாட்டில் நடால் நகரில் நேற்றிரவு நடந்த உலக கோப்பை குரூப் டி பிரிவு போட்டியில் இத்தாலி-உருகுவே அணிகள் மோதின. முன்னாள் உலக கோப்பை சாம்பியன்களான இரு அணிகள் மோதிய போட்டியைக் காண 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அரங்கில் குவிந்திருந்தனர். இரு அணிகளும் தொடர்ந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் தீவிரம் காட்டியதால் அனல் பறந்தது. 59வது நிமிடத்தில் முரட்டுத்தனமாக விளையாடிய இத்தாலி வீரர் மார்சியோ சிவப்பு அட்டை காண்பித்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதனால், 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் உருகுவே கேப்டன் டியகோ கோடின் கார்னர் பகுதியில் இருந்து பறந்து வந்த பந்தை கோலாக்கினார்.
இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்ற உருகுவே நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. 4 முறை உலக கோப்பையை வென்றுள்ள இத்தாலி அணி இந்த முறை முதல் சுற்றிலேயே பரிதாபகரமாக வெளியேறியது.உருகுவே கோல் அடிப்பதற்கு சற்று முன்னர் இத்தாலி அணியின் பெனாலிடி எல்லைக்குள் உருகுவே நட்சத்திர வீரர் சுவாரெசும், இத்தாலி தடுப்பு கள வீரர் ஜியார்ஜியோ சீலிய்னியும் மோதிக் கொண்டு விழுந்தனர்.அப்போது சீலீய்னி தோளை பிடித்துக் கொண்டு கதறினார். ஆனால், இதனை எதிர்பாராத மோதல் என நடுவர் நினைத்ததால் தண்டனை ஏதும் விதிக்கவில்லை. ஆட்டம் தொடர்ந்தது. ஆனால், டிவி ரீப்ளேவில் பார்த்த போது சுவாரெஸ், சிலீய்னியின் தோளில் வேண்டுமென்றே கடித்தது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு செல்சி அணியின் இவானோவிக்கை சுவாரஸ் கடித்த போது அவருக்கு 10 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரணி வீரர்களை கடித்ததால் 2 முறை தடை விதிக்கப்பட்டவர் சுவாரெஸ். இத்தாலி வீரரை சுவாரெஸ் கடித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று பிபா அறிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுவாரெசுக்கு 24 போட்டிகளில் விளையாட தடை அல் லது 2 ஆண்டு காலம் கால்பந்து விளையாட தடை ஆகியவற்றில் எதாவது ஒரு தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. உருகுவே மறுப்புஉருகுவே கேப்டன் டியகோ லுகானோ கூறுகையில், ‘‘சுவாரெஸ் கடித்ததாக கூறப்படும் சம்பவத்தை யாரும் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அப்படி ஏதும் நடக்கவில்லை. சிலீய்னியின் மோசமான செயல்தான் இது. இதனால் நான் முழுமையாக ஏமாற்றமடைந்துள்ளேன், ’’ என்றார்.