அடிக்கடி மின்தடை திருவொற்றியூரில் திடீர் சாலை மறியல்
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. புகார் செய்ய தொடர்பு கொண்டபோது மின்வாரிய அதிகாரிகள் போனை எடுக்காததால் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவொற்றியூர் ஜோதி நகர், டிகேஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் சில தினங்களாக அடிக்கடி மின்தடை, குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஜோதி நகர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்றிரவு மின்தடை ஏற்பட்டதால் மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொண்டபோது யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், மணலி நெடுஞ்சாலையில் நேற்றிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து சாத்தங்காடு போலீசாரும் மின் வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.