சமீப காலமாக நாளிதழ்களை புரட்டினாலே தங்க கடத்தல் செய்தி ஒன்றாவது இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தினந்தோறும் கடத்தல் தங்கம் சிக்குகிறது. சென்னை விமான நிலையத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ.12 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டிருக்கிறது.சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஒருவரை சோதனையிட்ட போது, அவரிடம் இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவரிடம் நடத்திய விசாரணையில் மும்பையை சேர்ந்த சந்த்வாணி என்பவர் சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது தெரிந்தது. சென்னை விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் மடக்கி சோதனையிட்ட போது 3 சூட்கேஸ்களில் 24 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கியுள்ளன. இப்படியாக ஒரே நாளில் 6 பேரிடம் 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது கடந்த 2 ஆண்டுகளில்தான் மிக அதிகம் என்பது சுங்கத் துறை அதிகாரிகளை கேட்டால் சொல்வார்கள். உலகிலேயே இந்திய மக்களுக்குத்தான் தங்கத்தின் மீது மோகம் அதிகம். இதனால், இந்தியாதான் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்கிறது. இதன் காரணமாக, இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலர்களின் தேவை அதிகரித்தது.
இதன் விளைவாக, கடந்த 2012ல் நடப்பு கணக்கு பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத அளவாக 4.8 சதவீதமாக உயர்ந்தது. அதனால், முந்தைய காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை 4 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தியது. அத்துடன் விடவில்லை. ரிசர்வ் வங்கி மூலமும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணமாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென கடைசியாக கடந்த ஜூலையில் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.இதன் காரணமாக, 2012ம் ஆண்டில் 860 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி, 2013ல் 825டன்னாக குறைந்தது. ஆனால், மக்களின் தங்க மோகம் குறைந்து விடவில்லை. தங்கம் வரத்தும் குறையவில்லை. அது சட்டவிரோத கடத்தல்களின் மூலம் வரத் தொடங்கி விட்டது. இதனால்தான், கடத்தல்கள் அதிகரித்து விட்டது. எனவே, புதிய மத்திய அரசு இது பற்றி சிந்திக்க வேண்டும். தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை களைந்து, ஏற்றுமதியை அதிகரிக்க செய்வது உள்பட வேறு வழிகளில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க முன்வர வேண்டும்.