உணவு பொருள் பண வீக்கத்தை கட்டுப்படுத்த மாநில அமைச்சர்களுடன் ஜூலை 4ல் ஆலோசனை மத்திய அரசு அழைப்பு
புதுடெல்லி: உணவுப் பொருள் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வருகிற ஜூலை 4ம் டெல்லிக்கு வரும்படி மாநில உணவு துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கஜானாவை காலி செய்து விட்டதாக குற்றம் சாட்டி வருகிறது. நாட்டில் பண வீக்கம், விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சி பொறுப்பை தொடங்க வேண்டிய நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பண வீக்கம், உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை நடத்தி புதிய முடிவுகளை எடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது. குறிப்பாக உணவு பொருட்கள் பண வீக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. வருகிற ஜூலை 4ம் தேதி டெல்லிக்கு வரும்படி மாநில உணவு துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான விலை கட்டுப்பாடு, தானியங்கள் கையிருப்பு நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.