பீகார் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் பாஜ தலைவர் சுஷில்குமார் மோடி பேட்டி
பாட்னா: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜ முடிவு செய்திருப்பதாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமார் முதல்வராக இருந்தார். மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ், கடந்த மே மாதம் விலகினார். அவரது ஆதரவாளர் ஜிதன் ராம் மன்ஜி தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த மே 23ம் தேதி புதிய அரசு மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் மற்றும் லாலு கட்சி ஆதரவுடன் நம்பிக்கை தீர்மானத்தில் ராம் மன்ஜி வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த வாரம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராம் மன்ஜியின் தலைமையை பிடிக்காத ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 18 எம்எம்ஏக்கள், கட்சிக்கு எதிராக வாக்களித்தனர். இதை தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தள அரசு மைனாரிட்டி அரசாக மாறிவிட்டதாக எதிர்கட்சியான பாஜ குற்றம் சாட்டியுள்ளது.
அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் பாஜ திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாஜ தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி அளித்த பேட்டி:ராம் மன்ஜி அரசு கடந்த மே 23ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அரசுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர். லாலு கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அரசுக்கு ஆதரவு அளிப்பதாக லாலு கட்சி அறிவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் எழுத்து பூர்வமாக கவர்னரிடம் கடிதம் கொடுக்கவில்லை. புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அரசு பிழைப்பது சந்தேகம். பீகார் சட்டமன்ற கூட்ட தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்ட தொடரில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு மோடி கூறினார்.