அரசாணையை மீறி இடமாற்றம் துப்புரவு ஊழியர்கள் போராட்டம்
சென்னை: பணியிடமாற்றம் செய்த அதிகாரிகளை கண்டித்து துப்புரவு ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சூளை மண்டலம் 8ல் கோட்டம் 78ல் சுமார் 70க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தினமும் சம்பந்தப்பட்ட கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுவர். இவர்கள் அனைவரும் அதே பகுதியில் வசிப்பவர்கள்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி இவர்களில் 15 ஊழியர்களுக்கு திடீரென பணியிடமாற்றம் அளிக்கப்பட்ட உத்தரவை மண்டல அலுவலர் அளித்துள்ளார். அதில் அனைவரும் கோட்டம் 68க்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விளக்கம் கேட்டபோது அலுவலர் விளக்கம் அளிக்க மறுத்து விட்டார். தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கும் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்ட பகுதிக்கும் உள்ள தூரம் கிட்டதட்ட 15 கிலோ மீட்டர். அவ்வளவு தூரம் சென்று வருவது சிரமம். போக்குவரத்து செலவு அதிகமாகும். மேலும் பணிசெய்யும் இடம் வசிக்கும் இடத்திற்கு சில கிலோ மீட்டர் இருக்கும் படிதான் பணியிடமாற்றம் போட வேண்டும் என்ற ஆணை உள்ளது. அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்துவதை கண்டித்து இன்று காலை வேலைக்கு வந்த துப்புரவு ஊழியர்கள் திடீரென சூளையில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.