மருத்துவகல்லூரியில் மாணவி தற்கொலை சக மாணவி கைது
சென்னை: சென்னையை அடுத்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார் பள்ளம் வன்னீஸ்வர தோட்டத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(48). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் யோகலட்சுமி(19), போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி பட்டய படிப்பு 2ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில், வேலூர் திருப்பத்தூரை சேர்ந்த கோட்டீஸ்வரி என்பவர் பிஎஸ்சி பட்டயபடிப்பு 3ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.இந்நிலையில், உடல் நிலை சரியில்லாமல் இருந்த யோகலட்சுமி நேற்று காலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் கோட்டீஸ்வரி என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, கோட்டீஸ்வரியை போரூர் போலீசார் கைது செய்தனர்.