சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பேர் படுகாயம்
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை யில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் செல்வகணேஷ்(29) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. நேற்று மாலை பணி முடிந்த பின்னர் கழிவு பட்டாசுகளை தொழிலாளர்கள் சேகரித்தனர். இதனை அழிப்பதற்காக ஆலை அருகே இருக்கும் காலி இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராமல் உராய்வு ஏற்பட்டதால் தீப்பற்றியதில் கழிவு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில், ஆலை தொழிலாளர்கள் மீனம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் ராஜூ(23), அதே ஊரைச் சேர்ந்த பரமன் மகன் சுப்பிரமணி(55) இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த ராஜூவை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.