குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர் லாந்து-சிலி அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி சா போலோ நகரில் நேற்றிரவு நடந்தது. இந்தப்போட்டியில் குரூப் பி பிரிவில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அணிகள் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 77வது நிமிடத்தில் மாற்று வீரராக அப்போதுதான் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வெஸ்லே பெனாலிடி ஏரியாவுக்குள் தனக்கு அருகே எதிரணி வீரர்கள் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு உயரப்பறந்து வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். 90வது நிமிடத்தில் ராபெனிடம் இருந்து கிராஸ் முறையில் வந்த பந்தை மற்றொரு மாற்று வீரரான மெம்பிஸ் டிபே கோலாக்கினார். இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வென்றது நெதர்லாந்து. ஓய்வு பெற்றார் வில்லாகுரூப் பி பிரிவில் நேற்றிரவு 9.30 மணிக்கு நடந்த போட்டியொன்றில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. முதல் 2 போட்டிகளில் நெதர்லாந்து, சிலி அணிகளுடன் தோல்வி கண்டிருந்த ஸ்பெயின் அணியினர் இந்த போட்டியில் எழுச்சியுடன் விளையாடினர். ஸ்பெயின் அணிக்காக 97வது மற்றும் தனது கடைசி போட்டியில் விளையாடிய டேவிட் வில்லா ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடிக்கும் 59வது கோல். 69வது நிமிடத்தில் இனியஸ்டாவிடம் இருந்து பந்தை கோலாக்கினார் ஸ்பெயின் வீரர் பெர்ணாண்டோ டோரஸ். 89வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினர் ஸ்பெயின் வீரர்கள். ஜுவான் மாடா மூன்றாவது கோலை அடித்தார். ஸ்பெயின் அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் எடுபடவில்லை. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றியுடன் உலக கோப்பையில் இருந்து வெளியேறியது ஸ்பெயின்.