சென்னையை அடுத்துள்ள சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழக வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளியுள்ளனர். அதில், பெரும்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 குடோன்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது நல்ல விஷயம்தான். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விட்டு, பல ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் விடுவதும், திடீரென வந்து பெரிய கட்டிடங்களை இடிப்பதுமாக உள்ளனர். அவ்வப்போது ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. சில சமயங்களில் கோர்ட் தடைஆணை அல்லது ஆளும்கட்சி பிரஷரில் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. பல லட்சம் செலவழித்து கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டு சிலருக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இடிக்கப்படாமல் விடப்படும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள்.
இது எந்த விதத்தில் நியாயம்? அரசு எப்போதும் உறுதியான கொள்கையை கொண்டிருக்க வேண்டும். அதிகாரிகளும் எந்த விதமான நிர்ப்பந்தத்திற்கும் ஆட்படாமல் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான ஏரிகளில் பல ஏக்கர் பகுதிகள் ஆக்கிரமிப்பில்தான் உள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் தமிழ்நாடு ஏரி ஆக்கிரமிப்புகள் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டில், சென்னை உயர்நீதின்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2008ம் ஆண்டு மே மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டது. இதன்பின்பும், தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதே போல், 2010ம் ஆண்டில் காஞ்சிபுரத்தை அடுத்த அய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், தங்கள் கிராமத்தில் இருந்த 6 குளங்களும் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளிடம் எத்தனை மனு கொடுத்தும் பலனில்லை என்றும் கூறியிருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தமிழகம் முழுவதும் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்த உத்தரவிட்டது. இது போல் பல முறை நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், ஆக்கிரமிப்புகள் தொடரத்தான் செய்கின்றன. இதை தடுக்க வருவாய் துறை, பொதுப்பணித் துறைகளில் கடை நிலை ஊழியர்களை கொண்டு ஏரி, குளங்களை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். ஒரு ஆக்கிரமிப்பு கட்டிடம் தோன்றும் போதே அதை இடிப்பதுடன் ஆக்கிரமிப்பாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் ஒரு காலகட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யவே மக்கள் அஞ்சுவார்கள்.