மணமேல்குடி: நடுக்கடலில் நேற்றிரவு மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்ததுடன் 3 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு போனது. இலங்கையின் தொடர் அட்டூழியம், தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 240 படகுகளிலும், ஜெகதாபட்டினத்திலிருந்து 230 விசைப்படகுகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் மீனவர்களின் 3 படகுகளை சுற்றி வளைத்தனர். கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஆல்பர்ட் ராஜா(41), முருகன்(30), கிங்கிஸ்தான்(32), சிலம்பு(28), ஜான்பீட்டர் படகில் சென்ற சின்னதம்பி, சேசுராஜா, செட்டியப்பன், டேனியல், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ஜெயக்குமாரின் படகில் சென்ற சரவணன்(35), அப்பாஸ்(27), மகேந்திரன் ஆகிய 11 பேரையும் கைது செய்தனர். அவர்களது 3 படகுகளையும் பறித்து சென்றனர்.
இதைபார்த்த மற்ற மீனவர்கள் வேகமாக வேறுபக்கம் சென்றனர்.மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருவது புதுக்கோட்டை மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடைக்காலம் முடிந்து முதல் நாளே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது 6 படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதன்பின், கடந்த 8ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீனவர்கள் 82 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை, அவர்களது ஒரு படகை சேதப்படுத்தி கடலில் மூழ்கடித்ததுடன், 24 படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றது. மத்திய அரசின் நடவடிக்கையால் 82 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களது 24 படகுகள் விடுவிக்கப்படவில்லை. படகுகளை விடுவிக்க கோரி மீனவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
தொடர்ந்து ஜூன் 18ம் தேதியும் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மீனவர்கள் 47பேரை இலங்கை கடற்படை கைதுசெய்ததுடன், அவர்களது 11 படகுகளையும் பறித்துக்கொண்டது. இதேபோல் 19ம் தேதி இரவு கோடியக்கரைக்கு கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 7 பேரையும் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களது ஒரு படகையும் எடுத்துச்சென்றுவிட்டது. இதுவரை புதுக்கோட்டை, நாகை, ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 176 பேர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களது பல கோடி மதிப்புள்ள 45 படகுகள் விடுவிக்கப்படவில்லை. மீனவர்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை, சிறைபிடிப்பு தொடர்ந்தால் தமிழகத்தில் மீன்பிடி தொழில் முற்றிலும் அழிந்துவிடும். இதனால், மீனவர் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விகுறியாகிவிடும். எனவே, இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும்’ என்றனர்.