அசாமில் ரூ6 கோடி கேட்டு ஆந்திர இன்ஜினியர் கடத்தல் போடோ தீவிரவாதிகள் அட்டகாசம்
ஓங்கோல்: அசாம் மாநிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த ஆந்திர இன்ஜினியர் ஒருவரை கடந்த வாரம் போடோ தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.6 கோடி தர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், சிமாகுர்தி மண்டலை சேர்ந்தவர் பந்தலமுடி நாகமல்லேஸ்வர ராவ். இவர் ஒரு சிவில் இன்ஜினியர். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிறுவனம் சார்பாக அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய கட்டுமான ப்ராஜக்ட் நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிடுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு நாகமல்லேஸ்வர ராவ் அசாம் சென்றார். இந்நிலையில் கடந்த 17&ம் தேதி போடோ தீவிரவாதிகள் அவரை கடத்தி சென்றனர். இன்ஜினியரை விடுவிக்க வேண்டும் என்றால், ரூ.6 கோடி தரவேண்டும் என்று போடோ தீவிரவாதிகள் கட்டுமான நிறுவனத்துக்கும் ராவின் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நாகமல்லேஸ்வர ராவின் மனைவி 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயில்லாத 2 குழந்தைகளும் தந்தையின் வருகைக்காக கவலையுடன் காத்திருக்கின்றன. இன்ஜினியரை மீட்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆந்திர இன்ஜினியரை பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ஆந்திர இன்ஜினியரை பத்திரமாக மீட்பது தொடர்பாக அசாம் மாநில டி.ஜி.பி.யுடன் நேற்றிரவு ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஐ.ஒய்.ஆர்.கிருஷ்ணா ராவ் தொலைபேசியில் பேசினார். போடோ தீவிரவாதிகளிடம் சிக்கிய இன்ஜினியரை பத்திரமாக மீட்க தூதர்கள் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.