ஆட்டம் முடிவடைய 30 விநாடிகளே இருந்தன. 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது அமெரிக்கா. போட்டியில் வென்றால் அடுத்த சுற்றில் நிச்சயம் காலடி பதிக்கலாம். ‘ஒரு போட்டி பாக்கி இருக்கும் போதே அடுத்த சுற்றுக்கு சென்றுவிடலாம். 1930ம் ஆண்டுக்கு பின்னர் உலக கோப்பை கால்பந்தில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் கிடைக்கப்போகும் வெற்றி இது,’’ என்ற கனவில் இருந்தனர் அமெரிக்க வீரர்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. போர்ச்சுகல் வீரர்கள் திடீரென விஸ்வரூபம் எடுத்தனர். ஒரு கோல் பின்னணியில் தோல்வியின் பிடியில் இருந்த போர்ச்சுகல் அணி, அதிரடி கோலை அசத்தலாக அடித்து டிரா செய்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடுகளத்தின் ஓரத்தில் இருந்து கிராஸ் முறையில் உதைத்த பந்து பெனாலிடி பாக்ஸ் பகுதியில் பறந்து வந்தது. அதனை வரேலா தலையால் முட்டி கோலுக்குள் தள்ள போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அரங்கில் கூடியிருந்த அமெ ரிக்க ரசிகர்களின் இதயம் நொறுங்கிப் போனது.
மனாஸ் நகரில் இன்று அதிகாலை குரூப் ஜி பிரிவில் அமெரிக்கா-போர்ச்சுகல் அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து போட்டியில்தான் இந்த சம்பவம் நடந்தது. திறமையான வீரர்கள் அடங்கிய போர்ச்சுகல் அணி முதல் போட்டியில் தோல்வி கண்டிருந்ததால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது. அதற்கேற்ப நானி ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து போர்ச்சுகல்லை முன்னிலை பெற வைத்தார். முதல் பாதியில் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இரண்டாவது பாதியில் ஆட்டமே தலைகீழானது. அமெரிக்க வீரர்கள் ஜோன்ஸ் (64வது நிமிடம்), டெம்ப்சே (81வது நிமிடம்) ஆகியோர் அடித்த கோல்களால் அமெரிக்கா 2-1 என முன்னிலைக்கு வந்தது. அமெரிக்க வீரர்களின் மிரட்டல் ஆட்டத்தால் அதிர்ந்து போயிருந்தனர் போர்ச்சுகல் வீரர்கள். தோல்வி நிச்சயம் என்றிருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அதிசய கோலை அடித்து, டிரா செய்தார் வரேலா. இந்த டிராவினால் போர்ச்சுகல் அணி, உலக கோப்பையில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
* போர்ச்சுகல்லுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்ததால் அடுத்து ஜெர்மனியை எதிர்த்து விளையாடும் போட்டியை குறைந்த பட்சம் டிரா செய்தால்தான் அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா முன்னேற முடியும். * ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா தோல்வியடைந்தால், போர்ச்சுகல்-கானா அணிகளிடையே நடைபெறும் போட்டியின் முடிவைப் பொறுத்தே அமெரி க்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரிய வரும். * அமெரிக்க கேப்டன் டெம்ப்சே கூறுகையில், ‘‘நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால், இதில் சாதகமான அம்சங்களேயே பார்க்க வேண்டும்,’’ என்றார். * அமெரிக்கா-போர்ச்சுகல் மோதிய போட்டியை மைதானத்தில் குழுமியிருந்த 40,123 ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.