மருத்துவமனையில் இருந்தபடியே இடைத்தேர்தலில் போட்டியிடும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்
புதுடெல்லி: கடந்த ஆண்டு உத்தரகண்ட் பேரழிவுக்கு பிறகு அங்கு முதல்வராக இருந்த விஜய் பகுகுணா மாற்றப்பட்டு மத்திய அமைச்சராக இருந்த ஹரீஷ் ராவத் முதல்வரானார். முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால் 6 மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற வேண்டும்.ஏற்கனவே இவரது ஆதரவாளரான தார்சுலா சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, ஹரீஷ் போட்டியிடுவதற்கு வசதியாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதே போல் டேராடூனில் உள்ள தொய்வாலா சட்டமன்ற தொகுதி பாஜ எம்எல்ஏவும், மாஜி முதல்வருமான ரமேஷ் பொக்ரியால் ஹரித்வார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார். எனவே தொய்வாலா சட்டமன்ற தொகுதியும் காலியாக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் டெல்லி சென்ற ஹரீஷ் ராவத் ஹெலிகாப்டர் சுழற்காற்றில் சிக்கி அவசரமாக தரையிறங்கியது. இதில் இருக்கையில் இருந்து ஹரீஷ் ராவத் தூக்கி வீசப்பட்டார். அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் வரவிருக்கும் இடைத்தேர்தலை மருத்துவ மனையில் இருந்தபடியே சந்திக்க ஹரீஷ் ராவத் திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தரகண்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் மொத்தமுள்ள 5 லோக்சபா தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. இதன் காரணமாக இரண்டு தொகுதிகளிலும் ஹரீஷ் ராவத் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.