ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 3 நேட்டோ படை வீரர்கள் பலி
காபூல்:ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 நேட்டோ படை வீரர்கள் பலியானார்கள். இவர்களுடன் ஒரு மோப்ப நாயும் பலியானது.ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முடக்கும் பணிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ நாடு களின் சர்வதேச பாதுகாப்பு உதவி படை ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கம் முதல் நேட்டோ நாடுகளின் செயல்பாடுகள் வெகுவாக குறைக்கப்பட்டன. தற்போது அந்தப் பணிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், ஹெல் மாண்ட் பிராந்தியத்தில் நாட்அலி மாவட்டத்தில் நேற்று காலை நேட்டோ படையினர் மோப்ப நாய் உதவியுடன் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், தன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் நேட்டோ படையை சேர்ந்த 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஒரு மோப்ப நாயும் பலியானது. இந்தத் தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப் பேற்றது.ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள 50 ஆயிரம் நேட்டோ படையினர் இந்தாண்டு இறுதிக்குள் வெளியேற இருப்பது குறிப்பிடத்தக்கது.