பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பொறுப்பேற்றதும் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்று மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன. இதற்கு காரணம் கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்பதை விட பெரும்பாலும் செயல்படவே இல்லை என்பதுதான். பிரதமர் பதவியேற்ற ஓரிரு வாரங்களில் நாட்டின் நிதிநிலைமை, பொருளாதார நிலைமைகள் பற்றி அவருக்கு அதிகாரிகள் எடுத்து கூறியிருக்கிறார்கள். மத்திய அரசின் நிதிநிலைமை மோசமாக உள்ளதை உணர்ந்த பிரதமர் மோடி, ‘பொருளாதாரத்தை சீர்படுத்த கசப்பு மருந்து சாப்பிட்டாக வேண்டும்’ என்றார். அவர் சொன்னது போல், முதல் கசப்பு மருந்தாக ரயில் கட்டண உயர்வை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா நேற்று அறிவித்து விட்டார். பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தியிருக்கிறார். ரயில் துறைக்கு பயணிகள் போக்குவரத்தில் ரூ.9000 கோடி இழப்பு ஏற்படுவதாகவும், அதனால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஏற்கனவே 10 ஆண்டுகளாக ரயில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து, கடந்த ஆண்டு ஜனவரியில் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
ஆனால், புறவாசல் வழியாக வந்தது போல், ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வை அறிவிக்காமல் அதற்கு முன்பே அறிவித்திருக்கிறார். கடந்த ஆட்சியின் போது, எரிபொருள் விலைக்கேற்ப ரயில்வே கட்டணத்தை மாற்றியமைத்து கொள்ளலாம் என ஒரு கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான மே 16ம் தேதியன்று இப்போது ஏற்றிய அதே அளவில் ரயில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிய அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே முந்தைய ஆட்சியாளர்கள் இதை செய்கிறார்கள் என அப்போது பாஜ கண்டனம் தெரிவித்ததால், அது வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதே கட்டண உயர்வை புதிய ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது எப்படியிருக்கிறது என்றால், பிச்சைக்காரருக்கு ‘ஒன்றுமில்லை என மருமகள் எப்படி சொல்லலாம், நான்தான் சொல்வேன் என்று மாமியார் அதையே சொன்னது போல் உள்ளது. ஆனாலும், எரிபொருள் விலைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற முந்தைய அரசின் கொள்கையை புதிய அரசும் அப்படியே பின்பற்றுவது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொள்கையை கைவிட்டு, கட்டண உயர்வை பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் மக்களுக்கு இந்த அளவுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்காது.