இந்தியாவின் உருளைக் கிழங்குகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப் போவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. அவற்றை விளைவிக்கப் பூச்சிக் கொல்லி மருந்து அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உருளைக்கிழங்குகளில் நோய்க் கிருமிகள் உள்ளதாகவும் ரஷ்யாவின் கால்நடை மற்றும் தாவரவியல் துறை கண்காணிப்பு ஆணையம் காரணம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சமீபத்தில் அனுப்பப்பட்ட 23 கன்டெய்னர்களில் தலா 29 டன்கள் வீதம் சுமார் 700 டன் உருளைக்கிழங்குகளை எடுத்து கொள்ளாமல் முடக்கி வைத்திருக்கிறது. அவற்றை முழுமையாக பரிசோதித்த பின்பே அனுமதிக்க முடியும் என்றும், தரம் மோசமாக இருந்தால் இந்திய உருளைக் கிழங்கு இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்த ஆணையம் கூறியிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளில் நிர்ணயித்ததை விட பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி, ஐரோப்பிய யூனியன் அவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதற்கு முன்பு, கடந்த ஆண்டில் இந்தியாவின் அரிசி மற்றும் காய்கறிகளுக்கு ரஷ்யா தடை விதித்திருந்தது. ஏழெட்டு மாத போராட்டத்திற்குப் பின் அந்த தடை நீக்கப்பட்டது.
இப்படியாக நமது ஒவ்வொரு வேளாண் உற்பத்தி பொருளுக்கும் ஒவ்வொரு நாட்டில் இறக்குமதி தடை விதிப்பதால் நமது அன்னியச் செலாவணி குறையும் என்பது ஒரு புறமிருக்க, இது, இந்திய உற்பத்தி பொருட்களின் தரம் குறைந்து வருவதை சர்வதேச சந்தையில் எடுத்துகாட்டுவதாக அமைந்து விடும். எனவே, இது இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் மட்டும் கவலைப்படும் விஷயம் அல்ல. அமெரிக்காவில் வசிக்கும் சஞ்சய் ராஜாராம் என்ற இந்திய வேளாண் விஞ்ஞானி இந்த ஆண்டு சர்வதேச உணவு பரிசை வென்றிருக்கிறார். கோதுமை உற்பத்தி குறித்த தனது ஆய்வின் மூலம் இதுவரை கோதுமையில் 480 புதிய ரகங்களை அவர் கண்டுபிடித்து அளித்துள்ளார். அவை 51 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு உலக கோதுமை உற்பத்தி 20 கோடி டன் அதிகரித்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. இதை பார்த்து பெருமைப்படும் அதே நேரத்தில் நமது நாட்டின் வேளாண் உற்பத்தி பொருட்கள் தரம் குறைவது பற்றி நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத் துறையினர் இது பற்றி ஆராய்ந்து நமது விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.