மறைந்த பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் இருந்த போது, 1969ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி நள்ளிரவில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தார். அப்போது இந்தியாவில் மிகப் பெரிய வங்கிகளாக இருந்த 14 வங்கிகளை தேசியமயமாக்கி பிறப்பிக்கப்பட்டதே அந்த சட்டம். அன்றைய காலகட்டத்தில் இந்திராகாந்திக்கு காங்கிரசுக்குள்ளேயே மெரார்ஜிதேசாய் உள்பட சில மூத்த தலைவர்களால் கடும் நெருக்கடி.அரசியல் நெருக்கடியை சமாளிக்கவே மெரார்ஜிதேசாயிடம் இருந்து நிதித்துறையை பறித்து கொண்டு, வங்கிகளை தேசியமயமாக்கும் சட்டத்தை இந்திராகாந்தி கொண்டு வந்தார் என பேசப்பட்டது. ஆனாலும், ‘சாதாரண மக்களுக்கு வங்கி சேவை கிடைக்கவில்லை. சாமான்யர்களும் வங்கிகளில் கடன் வாங்கி பயனடைய வேண்டுமென்பதே சட்டத்தின் நோக்கம்’ என இந்திராகாந்தி கூறினார். ஆனால், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 45 ஆண்டுகளாகிவிட்டன. இன்னமும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. நாடு முழுவதும் 60 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை. 6 லட்சம் கிராமங்களுக்கு வெறும் 40 ஆயிரம் கிளைகளே உள்ளன.
அதே போல், சாதாரண மக்கள் கடன் வாங்கினால், அவர்கள் கழுத்தில் கத்தி வைத்து வசூலிக்கிறார்கள். ஒரு நடுத்தர குடும்பம் கடன் வாங்கி வீடு கட்டி விட்டு, அதை அடைக்க முடியாமல் திணறும் போது, அந்த சொத்தை வங்கி நிர்வாகம் கைப்பற்றி ஏலம் விடுகிறது. விவசாயிகள் கடன் வாங்கினால் வட்டி மேல் வட்டி போட்டு வசூலிக்கிறது. சாமான்யர்களிடம் கடனை வசூலிப்பதற்காக வங்கிகள், குண்டர்களை அனுப்பியதும், அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வரை வழக்குகள் போய் கண்டனங்கள் எழுந்ததும் நடந்தது.அதே சமயம், கடனை திருப்பி செலுத்த வசதி இருந்தும் செலுத்தாத பெரிய நிறுவனங்கள் பொதுத் துறை வங்கிகளில் வைத்துள்ள கடன் ரூ.2.4 லட்சம் கோடி. இதை வாராக்கடன் என ரத்து செய்ய வங்கிகள் பரிசீலிப்பதாக தகவல். இதற்கு வங்கி ஊழியர் சங்கங்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தினர் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில், பெரிய நிறுவனங்கள், தனது கூட்டு நிறுவனங்கள் மற்றும் இதர பெயர்களில் வைத்துள்ள சொத்துக்களை கைப்பற்றி வாராக்கடன்களை வசூலிப்பதே முறையாகும். அதை விடுத்து சாமான்ய கடன்காரர்களை கொடுமைப்படுத்தும் வங்கி நிர்வாகங்கள், பெரிய நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் விடுவது நியாயமல்ல.