தமிழக காவல் துறையில் புதிதாக இன்னொரு தனிப் பிரிவு தொடங்க வேண்டியிருக்கும் போல் தெரிகிறது. சைபர் கிரைம், பொருளாதார குற்றப்பிரிவு உள்பட பல பிரிவுகள் இருப்பது போல் ‘போலி சர்டிபிகேட் தடுப்பு பிரிவு’ என்று ஒரு பிரிவை தொடங்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு போலி சர்டிபிகேட்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. கடந்த 1988ம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெயரில் ஏராளமான போலி சர்பிடிகேட்கள் புழக்கத்தில் விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, சாதாரண ரிக்ஷா ஓட்டுபவரிடம் போலி எம்.ஏ. சர்டிபிகேட் இருந்தது. இந்த போலி சர்டிபிகேட் விவகாரம் அப்போது பத்திரிகைகளில் பக்கம், பக்கமாக வந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் சில ஆண்டுகள், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கியவர்களுக்கு மதிப்பே போய் விட்டது.
இப்போது அதே போல் சென்னையில் போலி சர்டிபிகேட் தயாரிக்கும் கும்பல் பிடிபட்டிருக்கிறது. கருணாகரன் என்பவர் தலைமையில் இயங்கிய அந்த கும்பல் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே போலி சர்டிபிகேட்களை தயாரித்து விற்றிருக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களின் பெயரிலும் போலி சர்டிபிகேட்களை தயாரித்து விற்றிருக்கிறார்கள். இந்த கும்பலிடம் சர்டிபிகேட் வாங்கியவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள். அதனால், அந்த சர்டிபிகேட்டுகள் உண்மைத்தன்மை அறிய கல்வித் துறைக்கு அனுப்பப்படுவதில்லை. அதே போல், கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த கதிரேசன் என்பவரும் போலி சர்டிபிகேட்களை தயாரித்து விற்றதாக சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர், கால் சென்டர்களில் பணியாற்றும் ஊழியர்களில் பட்டம் முடிக்காதவர்களை குறிவைத்து விற்றிருக்கிறார். கால் சென்டர்களில் பணி நிரந்தரம் செய்ய பட்டம் படித்திருக்க வேண்டுமென விதி வைத்துள்ளார்கள்.
அதற்காக பணம் கொடுத்து சர்டிபிகேட் வாங்குபவர்கள், அதில் மாட்டிக் கொள்ள வாய்ப்பில்லை என நினைக்கிறார்கள். இப்படியாக போலி சர்டிபிகேட்கள் அதிகரித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், போலி சர்டிபிகேட்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. பல்கலைக்கழகங்களும் போலிகள் உருவாகாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து சர்டிபிகேட்களுக்கும் தனித்தனி எண் வழங்குவதோடு, அந்த எண்ணை இணையதளத்தில் போட்டு பார்த்தாலே, சர்டிபிகேட் யாருடையது என கண்டுபிடிக்கும் வகையில் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மேலும் கவனம் செலுத்தி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் போலி சர்டிபிகேட்களை தடுக்கலாம்.