தமிழகத்தில் சமீப காலமாக ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கடந்த ஆண்டில் திருச்சியில் ஒரு ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு, ரூ.25 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொள்ளை சம்பவத்துக்கு பின்புதான் ஏடிஎம் கொள்ளை முயற்சிகள் அதிகரித்தன.சில மாதங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. ஏடிஎம் எதிரே உள்ள வீட்டில் வசித்த வங்கி அதிகாரி எழுந்து வந்ததால், கொள்ளையன் தப்பியோடி விட்டான். இதன்பின், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம் அருகே ஒரு ஏடிஎம் மையத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் காவலாளியை கொன்று விட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கிறது. இந்த ஏடிஎம் மையத்தில் ஒரு நோட்புக் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் அதிகாலை 1.30 மணிக்கு ரோந்து போலீசார் வந்து கையெழுத்திடுவது வழக்கம்.
அப்படி ரோந்து போலீசார் வந்து பார்த்த போதுதான், காவலாளி கொல்லப்பட்டு பிணமாக கிடப்பதும், ஏடிஎம்மின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருப்பதும் தெரிந்திருக்கிறது. கொள்ளையர்கள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏடிஎம்களை பல நாட்கள் நோட்டம் விட்டு அதன்பின் ஒரு ஏடிஎம்மை குறிவைத்து கொள்ளையடிக்க முயற்சித்து வந்திருக்கின்றனர் என்பது நடந்த சம்பவங்களின் மூலம் தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் ஏடிஎம்களில் தனியாக வருபவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்துள்ளன. ஏடிஎம்களில் சிசிடிவி கேமரா வைத்திருப்பதாலும், வயதான தனியார் காவலாளிகளை நிறுத்தியிருப்பதாலும் மட்டுமே அவை பாதுகாப்பாக உள்ளதாக கருத முடியாது. அதே சமயம், எல்லா ஏடிஎம்களிலும் பாதுகாப்புக்காக அதிக காவலாளிகளை நியமிப்பதும், ஆயுதம் தாங்கிய போலீசாரை நியமிப்பதும் சாத்தியமற்றது. அதே போல் நள்ளிரவில் ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை மிக,மிக குறைவாகவே இருக்கும். இது போன்ற சூழ்நிலையில், நள்ளிரவில் ஓரளவு வாகனப் போக்குவரத்தும், ஆள் நடமாட்டமும் உள்ள முக்கியமான பகுதிகளில் மட்டும் 24 மணி நேரமும் ஏடிஎம்களை திறந்து வைக்கலாம். பாதுகாப்பில்லாத மற்ற பகுதிகளில் ஏடிஎம்களை இரவு 11 மணிக்கு மேல் மூடி விடுவது பற்றி வங்கிகள் பரிசீலிக்கலாம்.