ஊட்டி: நதிகளை இணைக்க நடவடிக்கை தேவை என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கூறினார்.நீலகிரி மாவட்ட விவசாயிகள், தொழிலாளர் சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி ஊட்டியில் உழவர் தின மாநாடு நடக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பழனிசாமி கூறியதாவது: விவசாய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவாக ஜூலை 5ம் தேதி உழவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு முக்கிய பிரச்னையாக நகரமயமாதல் உள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் நகரமயமாதல் மிக வேகமாக நடைபெறுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டிய கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களும் ஒப்பந்தப்படி தண்ணீர் தருவதில்லை. கஷ்டப்பட்டு விவசாய பொருட்களை உற்பத்தி செய்தாலும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.மேலும், விவசாய பணிகளுக்கு போதிய வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகளின் நீர் வீணாக கடலில் கலக்கிறது. அவற்றை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கை, காவிரியை இணைப்பது சாத்தியமில்லாதது என்றாலும், தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும். நீலகிரி தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.