கோடியக்கரையில் கைதான 2 இலங்கை மீனவர்களுக்கு 9ம் தேதி வரை காவல்
வேதாரண்யம்: கோடியக்கரையில் கைதான இலங்கை மீனவர்கள் 2 பேருக்கு வரும் 9ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி படகு பழுதாகி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்திரமோகன், ரவீந்திரன் ஆகிய 2 மீனவர்களை கோடியக்கரை கப்பல்படை முகாம் அதிகாரி கிஜாரே தலைமையிலான குழுவினர் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வேதாரண்யம் கடலோர காவல்படையினரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். இரு மீனவர்களையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிபதி லதா சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டனர். இரு மீனவர்களையும் புழல் சிறையிலிருந்து வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அவர்களின் காவலை வருகிற 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி லதா உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் இருவரையும் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.