நைஜீரியாவில் கலவரம் : பலி 200 ஆக உயர்வு
அபுஜா: நைஜீரிய அதிபர் தேர்தலுக்குப்பின் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் சிக்கி இதுவரை 200 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் குட்லக் ஜொனாதன் பெரும்பான்மை வாக்கு பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ சர்வாதிகாரி முகமுது புஹாரி தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜொனாதன் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால்தான் ஜொனாதன் வெற்றி பெற்றதாக கூறி, புஹாரி ஆதரவாளர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவ்வாறாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.